
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கோடி கேட்டு அதிமுக சட்ட நோட்டீஸ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி, அமைச்சர் நிர்மல் குமாருக்கு அதிமுக சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுகவின் சொத்துகளை கைப்பற்ற இபிஎஸ் முயற்சிப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதிமுக கொறடா அக்ரி. கிருஷ்ணமூர்த்தி சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில், இபிஎஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் முன்வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த கருத்துகளை 7 நாட்களுக்குள் திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றத்தில் ரூ.1 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.





























