இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் நாளை (மார்ச் 3) நிகழவுள்ளதாகவும், அப்போது நீல விளிம்புடன் சிவப்பு நிறத்தில் ஒளிரும் நிலாவை காண முடியும் என்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.

சூரியன்–பூமி–சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவது சந்திர கிரகணம். முழு கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்லும் சூரிய ஒளியில் நீல ஒளி சிதறி, சிவப்பு ஒளி மட்டும் சந்திரனை அடைவதால் நிலா அடர் ஆரஞ்சு/சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது; இதையே ‘பிளட் மூன்’ என அழைக்கின்றனர்.

இம்முறை சந்திரன் பூமி நிழலின் மையப்பகுதி வழியாகச் செல்லும் நிலையில், ‘அம்பிரா’ நிழலின் மேல் விளிம்பைத் தொட்டு உரசிச் செல்லும் என கூறப்படுகிறது. இதனால் உயர்ந்த வளிமண்டலப் பகுதிகள், குறிப்பாக ஓசோன் படலம் வழியாகச் செல்லும் ஒளியில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் உறிஞ்சப்பட்டு, அடர் நீல நிறம் மட்டும் நிலவின் விளிம்பில் மெல்லிய கோடாகத் தோன்ற வாய்ப்பு உள்ளது.

இந்த நிகழ்வை வெறும் கண்களாலேயே பாதுகாப்பாகப் பார்க்கலாம்; மேலும் தெளிவாகக் காண தொலைநோக்கி அல்லது பைனாக்குலர் பயன்படுத்தலாம். அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயாவில் முழுமையாகக் காண முடியும்; டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இறுதிப் பகுதி மட்டும் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி மாலை 4:58 முதல் 5:32 மணி வரை, மொத்தம் 58 நிமிடங்கள் சந்திர கிரகணம் நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.