தேர்வு காலத்தில் மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க பெற்றோரின் ஆதரவு மிக முக்கியம். முதலில், மகன் அல்லது மகளை பிற மாணவர்களுடன் ஒப்பிடுவது மன அழுத்தத்தை அதிகரிக்கக் கூடும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதிலாக, “இன்றைய தேர்வு எப்படி இருந்தது?”, “எளிமையாக இருந்ததா?”, “நாளைய தேர்வுக்கு தயாரா?” போன்ற எளிய கேள்விகளுடன் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை சொல்லலாம். தைரியமாக தேர்வெழுதச் சொல்லும் உறுதுணை குழந்தைகளுக்கு உதவும்.

மதிப்பெண்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல், அவர்கள் எடுத்த முயற்சியையும் உழைப்பையும் பாராட்டுவது அவசியம். இது தொடர்ந்து முயற்சி செய்யும் மனப்பாங்கை வளர்க்கும்.

வீட்டில் தேர்வுக்கேற்ற சூழல் உருவாக்க, டிவி மற்றும் மொபைல் போன் போன்றவற்றின் பயன்பாட்டை குறைக்கலாம். இரவு அல்லது அதிகாலையில் குழந்தைகளுடன் இருப்பது, நல்ல எண்ணங்களை விதைப்பது, பதற்றமில்லாத அமைதியான சூழலை பேணுவது பயத்தை குறைக்க உதவும்.

மேலும், ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் போதுமான தூக்கம் கிடைக்கச் செய்வதும் கவனத்தையும் உடல் நலத்தையும் மேம்படுத்தும்.