சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு, விசிக கட்சியின் வலிமை மற்றும் பங்களிப்புக்கு ஏற்ப அமைய வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதை கூறினார்.

2026 சட்டசபை தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல என்றும், வலதுசாரி சக்திகள் காலூன்ற விடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், கூட்டணியில் ஒரு அங்கமாக விசிக தனது கருத்துகளை பகிர்ந்ததாகவும் தெரிவித்தார்.

விசிக பேரம் பேசும் கட்சி அல்ல என்றும், திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே இலக்கு என்றும் திருமாவளவன் கூறினார். பேச்சுவார்த்தை அமைதியாகவும் சுமூகமாகவும் நடந்ததாகவும், எந்தெந்த தொகுதிகள் என்று குறிப்பாக பேசவில்லை என்றும் அவர் விளக்கினார்.

தாங்கள் கேட்கும் தொகுதி எண்ணிக்கையை திமுக குழுவுக்கு தெரிவித்து விட்டதாகவும், அது உறுதியான பிறகு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். ராஜ்யசபா சீட் எதையும் கேட்கவில்லை என்றும், புதுச்சேரியில் ஒரு பொதுத் தொகுதி உட்பட மூன்று தொகுதிகளை ஒதுக்கக் கேட்டுள்ளதாகவும், இதை தலைமைத்துடன் ஆலோசித்து அழைப்பு விடுப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் பாஜவின் அணுகுமுறை எடுபடாது என்றும், மாநிலத்தில் மதவாத அரசியல் மற்றும் ஜாதி அரசியலுக்கு இடமில்லை என்றும் அவர் கூறினார். தொகுதிப் பங்கீட்டில் “அதிகாரப் பகிர்வு” என்பது அமைச்சரவையில் பங்கு கேட்பது அல்ல; தொகுதி எண்ணிக்கையையே குறிக்கும் என்றும், இழுபறி ஏற்பட்டாலும் காங்கிரஸ் திமுக கூட்டணியிலேயே இருக்கும்; கூட்டணி கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.