புதுடில்லி: ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் நடந்ததையடுத்து, இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ஈரான் ஆதரவு போராட்டங்களை நடத்த முயற்சிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய திரட்டல்களை நெருக்கமாக கண்காணிக்குமாறு அமைச்சகம் கேட்டுள்ளது.
மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் தீவிர பேச்சாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெறுப்புப் பேச்சு, வன்முறை தூண்டுதல் போன்ற பதிவுகளை வெளியிடுபவர்களை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்கள் தங்களது பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்றும், தேவையெனில் 144 தடை உத்தரவை அமல்படுத்தலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத ரீதியிலான பதற்றம் மற்றும் வன்முறை சம்பவங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.




