அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்களில் ஈரான் பயன்படுத்தும் ஏவுகணைகள் சீனாவிலிருந்து பெறப்பட்டவை என்ற தகவலை சீனா மறுத்துள்ளது. பெய்ஜிங்கில் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அந்த குற்றச்சாட்டு “உண்மைக்கு புறம்பானது” என தெரிவித்ததுடன், போர் பிற பிராந்தியங்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஈரானின் தலைவர் கமேனி உள்ளிட்ட 48 முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்த நிலையில், கத்தார், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் மீது ஈரான் தாக்குதலை விரிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், குறிப்பிட்ட நாடுகளுக்கிடையேயான மோதல் மற்ற நாடுகளுக்கு விரிவடைவது கண்டனத்திற்குரியது என சீனா தெரிவித்தது. அனைத்து நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து சீனாவுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சகம் கூறியது.

மேலும், இந்த மோதலில் ஈரானில் ஒரு சீன குடிமகன் உயிரிழந்ததாகவும், தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதிகளில் இருந்து சீன மக்கள் விரைவாக வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதுவரை 3,000க்கும் மேற்பட்ட சீன குடிமக்கள் ஈரானை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.