ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு அமைப்பாக குறிப்பிடப்படும் அராம்கோவின் ராஸ் தனுரா நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகி, சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம், பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஈரானின் தலைவர் கமேனி உள்ளிட்ட 48 முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படும் பின்னணியில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சை ஒட்டி வந்த மறைமுக அழைப்பை ஏற்க மறுத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேற்காசிய நாடுகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தாக்குதல்கள் விரிவடைகின்ற சூழலில், அராம்கோவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம் இலக்காகியுள்ளது. தாக்குதலால் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்தாலும், உடனடி நடவடிக்கையால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ஆலை மூடப்பட்டுள்ளதாக தகவல். அமெரிக்கா–ஈரான் மோதலால் ஏற்கனவே கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தைகள் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், சவுதியில் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் தாக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொடுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ளது.