குவைத் வான்வெளியில் பறந்த அமெரிக்க போர் விமானங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதாக முதலில் தகவல்கள் வெளியானது. இதனால் பல விமானங்கள் விழுந்து நொறுங்கியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து குவைத் பாதுகாப்புத் துறை, திங்கள்கிழமை காலை பல அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதாக தெரிவித்தது.
அறிக்கையில், விமானங்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், உடனடியாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் குவைத் கூறியது. காயமடைந்த அமெரிக்க விமானப் படையினர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களின் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா ஈரான் ஆட்சியாளர் கமேனியை கொலை செய்ததாக கூறப்படும் பின்னணியில், பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக செய்தி குறிப்பிடுகிறது. இதன் தொடர்ச்சியாக துபாய், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாகவும், அந்த தாக்குதல்களில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக பென்டகன் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், குவைத் வான்வெளியில் ஏற்பட்ட இந்த விமான விபத்து ஈரான் தாக்குதலால் அல்ல என அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு தெரிவித்தது. குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு தவறுதலாக 3 அமெரிக்க போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த தவறை குவைத் ஒப்புக் கொண்டதாகவும், மீட்புப் பணிக்கு உதவிய ஈரானுக்கு நன்றி தெரிவித்ததாகவும் செய்தி கூறுகிறது.



