இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னியை புதுடில்லியில் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார். ஐதராபாத் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
வர்த்தகம், எரிசக்தி, கனிமங்கள், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
செய்தியாளர்களிடம் பேசிய மோடி, பிரதமராக கார்னி இந்தியாவுக்கு வருவது முதல் முறை என்றும், இதை முக்கியமான மைல்கல்லாகக் கருதுவதாகவும் கூறினார். கடந்த ஆண்டு கனடாவில் நடந்த ஜி7 கூட்டத்தில் தன்னை அன்புடன் வரவேற்றதை நினைவுகூர்ந்தார்.
மேற்காசிய நிலவரம் “மிகவும் கவலை அளிக்கிறது” என்று கூறிய மோடி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் மோதல்களை தீர்க்க இந்தியா ஆதரவளிப்பதாக தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்குள்ள நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறினார்.
மேலும், பயங்கரவாதம் இந்தியா மற்றும் கனடாவுக்கு மட்டுமல்ல, மனிதகுலம் முழுவதற்கும் கடுமையான சவாலாக இருப்பதை இருநாடுகளும் ஒப்புக்கொள்வதாக மோடி தெரிவித்தார். இதற்கிடையில், மும்பையில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி மற்றும் குடும்பத்தினர், கார்னி மற்றும் அவரது மனைவி டயானாவை பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர்.




