சென்னை: பிரதமர் தமிழகம் வந்திருந்த நாளில் போராட்டத்தைத் தூண்டியதாகவும் அல்லது அனுமதித்ததாகவும் திமுக அரசை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மாநிலத்தில் இருந்த வேளையில் ஈரான் தாக்குதல் தொடர்பான விவகாரத்தை முன்வைத்து இஸ்லாமிய அமைப்புகளும் விசிகவும் இணைந்து சென்னையில் அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்று போராட்டம் நடத்தியதாக கூறினார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் அறவழியில் போராடிய போது அனுமதி மறுக்கப்பட்டதாகவும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டு, நேற்று மட்டும் காவல்துறை ஏன் “வேடிக்கை பார்த்தது” என கேள்வி எழுப்பினார்.
நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் பொதுமக்களுக்கு ஒரு விதமாகவும், திமுக கூட்டணிக் கட்சியினருக்கு வேறுவிதமாகவும் அணுகுமுறை உள்ளதா என அவர் விமர்சித்தார். மேலும், பிரதமரின் பாதுகாப்பில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தலைநகரில் திட்டமிட்டு போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுவதாக தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் திறனை திமுக அரசு இழந்திருக்கலாம் என்றும், காரணம் எதுவாயினும் பிரதமர் வருகை நாளில் அரசின் இந்த மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.




