விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் கே. பொன்முடி மீது நிலுவையில் உள்ள செம்மண் குவாரி ஊழல் வழக்கில் ஏப்ரல் 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் விதிமுறைகளை மீறி செம்மண் எடுக்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும் போலீசார் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
இந்த வழக்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2012ஆம் ஆண்டு பதிவு செய்தனர். பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை அக்டோபர் வரை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 57 சாட்சிகளில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மணிமொழி ஏப்.2 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த தீர்ப்பு கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




