பல பெற்றோர் தங்கள் வாழ்நாளை குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் போன்ற தேவைகளுக்காக செலவழிக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் முதுமைக்கால சேமிப்பை திட்டமிடாமல் போய்விடும் நிலையும் அதிகம். சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள முதியவர்களில் சுமார் 65% பேர் நிதி ரீதியாக பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

நிதி சுதந்திரம் இல்லாத முதியோர் அன்றாட வாழ்வில் பாதுகாப்பின்மை, மனவேதனை மற்றும் சமூகத்தில் கண்ணியத்தை பாதிக்கும் சூழல்கள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம். இதை கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

சமூகப் பாதுகாப்புத் திட்ட அதிகாரிகள் கூறுகையில், தகுதி அடிப்படையில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோருக்கு மாதம் ரூ.1,200 வரை நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், ஆதரவற்றவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், 60 வயது பூர்த்தியானதற்கான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று (வாக்காளர் அட்டை அல்லது மின்சார கட்டண ரசீது) ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் வேறு அரசு நிதியுதவி பெறவில்லை என்பதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும்.

தகுதியுள்ள முதியோர் அருகிலுள்ள இ-சேவை மையங்கள், வட்டாட்சியர் அலுவலகம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.