மதுரை: திருப்பரங்குன்றம் சம்பவத்தில் உயிர்த்தியாகம் செய்த பூர்ணசந்திரனின் மனைவி இந்துமதிக்கு அரசு வேலை பெற்றுத்தரவும், அவர்களின் இரு மகன்களை மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளியில் சேர்க்கவும் பா.ஜ. தரப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மதுரையைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியான பூர்ணசந்திரன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிய நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் தமிழக அரசு ஏற்க மறுத்ததாக கூறப்படும் சூழலில், இதை கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி, மேடை அருகே இந்துமதி மற்றும் மகன்கள் சிவனேஷ், இனியனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். குழந்தைகளிடம் அவர்கள் படிப்பைப் பற்றி ஆங்கிலத்தில் கேட்டதுடன், இந்துமதியிடம் அவர் செய்யும் வேலை குறித்து விசாரித்ததாகவும், இந்த சந்திப்பு சுமார் மூன்று நிமிடங்கள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதே பொதுக்கூட்டத்தில் பிரதமர், இந்த சம்பவம் வலியை ஏற்படுத்தியதாக கூறி, இது தி.மு.க. அரசின் “நேர்மையற்ற தன்மை” காரணமாக நடந்ததாக குற்றம்சாட்டினார். இதனிடையே, இந்துமதி ஆசிரியர் பணிக்கான கோரிக்கையுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அளித்த மனு பரிசீலனையில் இருப்பதாகவும், குழந்தைகளை மதுரை நரிமேடு கே.வி. பள்ளியில் சேர்க்க பா.ஜ.வினர் ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
பிரதமரை சந்தித்தபோது மனு அளிக்க இந்துமதி முயன்ற நிலையில், “மனு ஏற்கனவே பரிசீலனையில் உள்ளது; நல்ல பதில் வரும்; பிரதமரிடம் நேரடியாக கொடுக்க வேண்டாம்” என பா.ஜ. தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




