அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் மோதல் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், நிலவும் போர் பதற்றம் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளாக மாறக்கூடும் எனக் குறிப்பிட்டு, பொது அமைதியை பேண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் நபர்கள் மற்றும் ஈரானுக்கு ஆதரவாக பயங்கரவாதப் போக்குடன் செயல்படுவதாகக் கூறப்படும் மதப் பிரசாரகர்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளின் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் யூத வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவி கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை தொடர்ந்து சோதனை செய்தல் ஆகியவற்றையும் கடிதம் வலியுறுத்துகிறது. ஈரானுக்கு ஆதரவான அமைப்புகள், அல்-குவைதா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் சமூக ஊடக செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும், தவறான தகவல்கள் பரவாமல் சமூக ஊடகங்களை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு நிகழ்வுகள் காரணமாக நாட்டில் முன்பும் கலவரங்கள் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, 1989-ல் சல்மான் ருஷ்டியின் “தி சாத்தானிக் வெர்சஸ்” நூலுக்கு எதிரான போராட்டங்களுடன் தொடர்புடைய மும்பை வன்முறை சம்பவம் மற்றும் 1990-ல் குவைத் மீது ஈராக் படையெடுத்தபோது இந்தியாவில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் ஆகியவற்றை உள்துறை அமைச்சகம் நினைவூட்டியுள்ளது.




