கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைவு தொடர்பாக, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

சபரிமலைக்கு நாடு முழுவதும் இருந்து இருமுடி கட்டி பக்தர்கள் வருகை தருகின்றனர். பாரம்பரிய நடைமுறையின்படி 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு யாத்திரை அனுமதி இல்லை; 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது. இதற்குக் காரணமாக, அய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதாகும் நம்பிக்கை முன்வைக்கப்படுகிறது.

2018 தீர்ப்புக்குப் பிறகு அப்போது ஆட்சியில் இருந்த இடதுசாரி அரசு உத்தரவை நடைமுறைப்படுத்த முயன்ற நிலையில், பக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு பெண்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்தின்போது, தந்திரி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி பல தரப்பினரால் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஜெயக்குமார், உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த மார்ச் 14 காலக்கெடுவுக்குள் தேவஸ்தானத்தின் நிலைப்பாட்டை விளக்கும் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்றும், பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்பதே போர்டின் உறுதியான நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.