மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்கள் வராமல் தடுக்கும் வகையில் தி.மு.க. அரசு போக்குவரத்து நெரிசலை உருவாக்கியதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார்.

மண்டேலா ரிங் ரோடு பகுதியில் நடைபெற்ற தே.ஜ. கூட்டணி பொதுக்கூட்டம் தென் மாவட்டங்களுக்கான முதல் கூட்டமாக குறிப்பிடப்பட்டது. கூட்டணிக் கட்சியினர் ஆயிரக்கணக்கானோரை வாகனங்களில் அழைத்து வந்த நிலையில், ரிங் ரோடு தனியார் ஓட்டல் அருகே வாகன நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் போலீஸ் கெடுபிடி காரணமாக தொண்டர்களும் பொதுமக்களும் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது. பிரதமர் வருகை நேரம் நெருங்கியபோது, தமிழக பா.ஜ. தேர்தல் பொறுப்பாளரான கோயல் வாகன நிறுத்த இடத்துக்கே சென்று போலீசாரிடம் கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து அவர் நேரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டது. நெரிசலில் சிக்கி காரில் வந்த பா.ஜ. தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீநிவாசன், கோயல் அங்கு இருப்பதை கவனித்து இறங்கி நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோயல், சுமார் 15 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாகவும், போலீசார் ஒத்துழைக்கவில்லை என்றும், அதனால் தானே நேரில் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.