ஈரான் அருகிலுள்ள ஹார்முஸ் ஜலசந்தி நீண்ட காலத்திற்கு மூடப்பட்டிருந்தால், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டக்கூடும் என்று ஆய்வு நிறுவனம் வுட் மெக்கென்ஸி தெரிவித்துள்ளது.
மேற்காசியா பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாகவும், இந்த இடையூறு நீடித்தால் வழங்கல் அபாயம் அதிகரித்து விலை 100 டாலர் அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
உலகளவில் சுமார் 15% எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கடத்தப்படுவதாகவும், உலகின் சுமார் 20% திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) கப்பல் போக்குவரத்தும் இதன் வழியே நடைபெறுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜலசந்தி அருகே சென்ற மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை ஏற்கெனவே உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்போது முக்கியமான கேள்வி, ஏற்றுமதி கப்பல்களுக்கு ஜலசந்தி வழியாக எப்போது மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்பதே. சரக்குப் போக்குவரத்து கட்டணமும் காப்பீட்டு செலவும் உயர்ந்தால், அதன் தாக்கம் இறுதியில் எண்ணெய் விலையிலேயே பிரதிபலிக்கும் எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது.




