வியன்னா

போர் சூழ்நிலையில் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் சேதமடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் நான்காவது நாளை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 மணி நேர இடைவெளிக்குப் பிறகு ஈரான் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்ததாகவும், அமெரிக்கா-இஸ்ரேல் படைகளும் தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

போர் தீவிரமடைந்த நிலையில், ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களில் ஒன்றான நடான்ஸ் நிலையம் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தியதாக ஐஏஇஏ முன்பே தெரிவித்திருந்தது. தற்போது அந்த தாக்குதலில் நிலையம் சேதமடைந்துள்ளதாக முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐஏஇஏ வெளியிட்ட தகவலின்படி, சமீபத்திய செயற்கைக்கோள் படங்களில் பூமிக்கடியில் உள்ள நடான்ஸ் வளாகத்தின் மேற்பரப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதை முகமை உறுதிப்படுத்த முடிகிறது என்றும், இதுவரை எந்தக் கதிரியக்க கசிவும் கண்டறியப்படவில்லை என்றும், கூடுதல் பாதுகாப்பு சிக்கல்கள் எதுவும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.