இந்தியா மற்றும் கனடா இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில், நாட்டின் ஆக்கப்பூர்வ அணுசக்தி தேவைக்காக கனடா 2035 வரை யுரேனியம் வழங்கும் நீண்டகால ஒப்பந்தமும் இடம்பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.24,000 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் இந்திய அணு உலைகளுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் என கூறப்படுகிறது.

கனடா பிரதமர் மார்க் கார்னி நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். மும்பையில் தொழிலதிபர்களை சந்தித்த அவர், பின்னர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அதன் பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

பிரதமர் மோடி, 2030க்குள் இந்தியா-கனடா வர்த்தகத்தை ரூ.4.50 லட்சம் கோடியாக உயர்த்துவதே இலக்கு என கூறினார். முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அரிய வகை கனிமங்கள், அணுசக்தி, தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் கூட்டுறவு வலுப்பெறுவதாக அவர் குறிப்பிட்டார். சிறிய ரக அணு உலைகள் மற்றும் மேம்பட்ட நவீன அணு உலைகள் அமைப்பது குறித்தும் இணைந்து பணியாற்றப்படும் என்றும், செயற்கை நுண்ணறிவு துறையில் குவான்டம் கம்ப்யூட்டிங், சூப்பர் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர் உற்பத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஒத்துழைப்பு விரிவடையும் என்றும் கூறினார்.

கனடா பிரதமர் கார்னி, கடந்த ஓராண்டில் உறவை புதுப்பிக்கும் வகையில் முன் எப்போதும் இல்லாத அளவில் பேச்சுகள் மற்றும் சந்திப்புகள் நடந்ததாக தெரிவித்தார். இது வெறும் உறவை மீட்டெடுக்கும் முயற்சி அல்ல; நம்பகமான இரு நாடுகளுக்கிடையே வலுவான நட்புறவை உருவாக்கும் நடவடிக்கை என்றும், இதன் மூலம் இருதரப்பு உறவு மீண்டும் ஆழமடைந்துள்ளதாகவும் கூறினார்.