ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அதிக விழிப்புடன் இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் மத்திய அரசு புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பின்னணியில் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், யுஏஇயில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபி தூதரகமும் துபாய் துணைத் தூதரகமும் வழக்கம்போல் செயல்பாட்டில் உள்ளதாகவும், தேவையெனில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவசர தேவைகளுக்காக 800-46342 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், +971543090571 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




