புதுடில்லி: மேற்காசியாவில் தொடரும் மோதல்கள் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்தியா குரல் எழுப்புவதாகவும் கூறினார்.
பிராந்தியத்தில் பல உயிர்கள் இழந்ததற்கு வருத்தம் தெரிவித்த அவர், வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசிப்பதால் அவர்களின் பாதுகாப்பு அரசின் முக்கிய முன்னுரிமை என குறிப்பிட்டார்.
வணிகக் கப்பல் போக்குவரத்து மீது நடைபெறும் தாக்குதல்களை இந்தியா உறுதியாக எதிர்க்கிறது என்றும், கடந்த சில நாட்களில் இத்தகைய சம்பவங்களால் சில இந்தியர்கள் உயிரிழந்ததுடன் மேலும் சிலர் காணாமல் போனதாகவும் தெரிவித்தார்.
புனித ரமலான் மாதத்தில் பிராந்தியத்தின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.




