சென்னை: தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, மக்கள்மையமான ஆக்கப்பூர்வ பணிகள் மூலம் கட்சியின் ஓட்டுகளை முழுமையாக ஒருங்கிணைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரு நாள் பயணமாக வந்த மோடி, கடந்த ஞாயிறன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகளிடம் அவர் விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது, தமிழக மக்கள் தி.மு.க., மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை விரும்புவதாகவும் அவர் கூறினார். தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் முழு மூச்சுடன் களப்பணியாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், கட்சிக்கு ஆதரவான ஓட்டுகளை முழுமையாக பெற வேண்டுமெனில், ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள மக்களுடன் தினமும் தொடர்பில் இருந்து, அவர்களுக்கு தேவையான சிறு சிறு உதவிகளை மனம் கவரும் வகையில் செய்து நம்பிக்கை உருவாக்க வேண்டும் என்றார். இதை பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பகிர்ந்து, அவர்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தவும் மோடி கேட்டுக் கொண்டார்.




