மதுரையில் நடைபெற்ற தே.ஜ. கூட்டணி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க.–காங். கூட்டணியையும் ‘இண்டி’ கூட்டணியையும் குறிவைத்து கடுமையாக விமர்சித்தார். தேசிய அரசியல் விவாதங்களோடு, மதுரையைச் சார்ந்த உள்ளூர் பிரச்னைகளையும் இணைத்து அவர் பேசினார்.

தி.மு.க. ஆட்சியில் ஊழல் பரவலாக உள்ளதாக கூறிய மோடி, ‘டிரான்ஸ்பர்’ விவகாரம், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறிய மோசடி, ஒப்பந்தங்கள், மணல் திருட்டு, டாஸ்மாக் தொடர்பான மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தொகை விவரங்களுடன் பட்டியலிட்டார். இதனால் ஆட்சியைத் தொடர தி.மு.க.-க்கு தார்மீக உரிமை இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தி.மு.க.வில் இருந்து “என்னிடமோ என் தந்தையிடமோ பயமில்லை” என்ற பேச்சுக்கு மறைமுகமாக பதிலளித்த அவர், ஜனநாயகத்தில் யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்றும், விமர்சனம் என்பது தன் பணிக்கான அங்கீகாரம் என்றும் கூறினார். சாதாரணமாக அமைச்சர்களுக்குள் நல்ல செயல்பாட்டுக்கான போட்டி இருக்கும் நிலையில், தி.மு.க.வில் “யார் அதிகம் ஊழல் செய்வது” என்ற போட்டி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

உள்ளூர் பிரச்னைகளில், மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கைத் தொடர்ந்து தி.மு.க. மேயர் பதவியிழந்தது, மாநகராட்சியில் துாய்மையின்மை மற்றும் சாலை பிரச்னைகள் போன்றவற்றை அவர் குறிப்பிட்டார். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2004–2014 காலத்தில் காங். மற்றும் தி.மு.க. ஆட்சியில் உட்கட்டமைப்பு வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டதாக கூறிய மோடி, நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் பாலம் உள்ளிட்ட திட்டங்கள் கவனிக்கப்படவில்லை என விமர்சித்தார். அதே நேரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைக் புகழ்ந்த அவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள், இமானுவேல் சேகரன் உள்ளிட்ட தலைவர்களையும் நினைவுகூர்ந்தார்.