புதுடில்லி: வளைகுடா பிராந்தியத்தில் வாழும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து ஓமன், குவைத் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. அந்தப் பிராந்தியத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மற்றும் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலீத் அல் ஹமாத் அல் முபாரக் அல் சபா ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார்.
தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர், அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக இரு நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.




