திமுகவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எந்த கெடுவும் விதிக்கப்படவில்லை; இழுபறியும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தற்போது கூறுவதற்கு கூடுதல் தகவல் எதுவும் இல்லை என்றும், பேச்சுவார்த்தை முடிந்ததும் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும், எத்தனை தொகுதிகள் என்பது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் அவர் கூறினார்.