நிர்வாக அமைப்புகளை எளிமையாக்கவும், மக்களுக்கு சேவை வழங்கலை திறம்பட மேம்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சார்ந்த தீர்வுகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிதாக பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

புதுடில்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளர்ச்சியின் பலன் மிகவும் நலிந்த மற்றும் பின்தங்கிய பிரிவினரை சென்றடையும் போதே நாட்டின் முன்னேற்றம் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

புவியியல், சமூக அல்லது பொருளாதார காரணங்களால் எந்த சமூகமும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் அயராது பாடுபட வேண்டும் என்றும், மாவட்டம் அல்லது மாநில அளவிலான பொறுப்புகளில் துறை எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைந்த கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஏ.ஐ. தீர்வுகள், டிஜிட்டல் குறைதீர்க்கும் வழிமுறைகள், நிகழ்நேர பகுப்பாய்வு போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி நிர்வாகத்தை எளிமையாக்கி, கடைக்கோடி மக்களுக்கும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

‘தேசமே முதன்மை’ என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவையே உண்மையான பொது சேவையின் அடிப்படை; மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காக்கும் தூண்களும் அவையே என்றும் அவர் நினைவூட்டினார்.