வான்வெளி மூடப்பட்டதையடுத்து துபாய் விமான நிலையத்தில் சிக்கியிருந்த பேட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து தற்போது பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான ராணுவத் தாக்குதல்கள் தொடங்கிய பின்னர் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவியதாக தெரிவிக்கப்பட்டது. அபுதாபி, துபாய், தோஹா, ரியாத் உள்ளிட்ட நகரங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இங்கிலாந்தின் பர்மிங்கமில் நடைபெறும் பேட்மின்டன் போட்டியில் பங்கேற்க விமானத்தில் சென்ற சிந்து துபாயில் தடைபட்டார். பின்னர் அவர் மற்றும் அவரது குழுவினர் துபாய் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் சிந்து பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பாக வந்து இறங்கினார். சமூக வலைதள பதிவில், கடந்த சில தினங்களாக இருந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியதில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், கடினமான சூழலிலும் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்த அனைவருக்கும் நன்றி கூறினார்.