தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி “பொய்களை அவிழ்த்து விடுகிறார்” என்று விமர்சித்தார். தன்னால் குறிப்பிடத்தக்க சாதனைகள் சொல்ல முடியாததால் இவ்வாறு பேசுகிறார் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

சென்னையில் நடைபெற்ற ஆங்கில வார இதழ் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு அனைத்து துறைகளிலும் “ஆல் ரவுண்டர்” ஆக உயர்ந்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை ‘நம்பர் 1’ மாநிலம் என மத்திய பா.ஜ.க. அரசே பாராட்டியதாகவும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் இதுபோன்ற வளர்ச்சியை காட்ட முடியாது என்றும் கூறினார்.

பா.ஜ.க. செய்வது வன்முறை, வெறுப்பு பேச்சு, பிற்போக்குவாதம் என விமர்சித்த அவர், அதற்கு மாற்றாக தி.மு.க. ஆட்சி நேர்மறையான முற்போக்கு அரசாக செயல்படுகிறது என்றார். மத்திய அரசின் உதவி இல்லாமலும், அவர்களின் நெருக்கடிகளை மீறியும் சாதித்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் கூறும் குறைகளையும் கேட்டு சரிசெய்வதாகவும் தெரிவித்தார்.

மதுரையில் பிரதமர் மோடி, சென்னை மதுரவாயல்–துறைமுகம் மேம்பாலப் பணிகள் குறித்து குற்றம்சாட்டியதை ஸ்டாலின் மறுத்தார். இந்த திட்டம் வரக்கூடாது என்று தடை செய்தது மோடி கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. தான் என்றும், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி தற்போது தான் பணிகள் நடைபெறுகின்றன என்றும் கூறினார்.

மேலும், கூட்டணியில் யார் தலைமை என்றே தெரியாத நிலை இருப்பதாக சுட்டிக்காட்டிய ஸ்டாலின், ஒரே மேடையில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் எனவும், தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும் எனவும் கூறப்படுவது “பெரிய காமெடி” என விமர்சித்தார். தி.மு.க. கூட்டணி எண்ணிக்கைக்காக அல்ல, எண்ணத்தால் உருவான கொள்கை கூட்டணி என்றும், மோடி தி.மு.க. ஆட்சி ‘கானல் நீர்’ என்றால், தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் கனவே ‘கானல் நீர்’ ஆக முடியும் என்றும் அவர் கூறினார்.