புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உதவியுடன் உருவாக்கப்பட்டு, எந்த நீதிமன்றமும் வழங்காத போலி தீர்ப்புகளை வழக்கு விசாரணையில் சமர்ப்பிப்பது தவறு மட்டுமல்ல; அப்பட்டமான தொழில்முறை நடத்தை விதிமீறல் என்றும் உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திராவில் உள்ள ஒரு விசாரணை நீதிமன்றத்தில் நடந்த சொத்து தகராறு வழக்கில், சில “முந்தைய தீர்ப்புகள்” என மேற்கோள் காட்டப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்டில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர், அந்த மேற்கோள் தீர்ப்புகள் எந்த நீதிமன்ற பதிவுகளிலும் இல்லாதவை என்றும், அவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவை என்றும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், மேற்கோள் தீர்ப்புகள் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட போலி தீர்ப்புகள் என்பதைக் கவனத்தில் கொள்ளாமல், உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போலி மற்றும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட தீர்ப்புகளை நம்பி விசாரணை நீதிமன்றம் முடிவு எடுத்திருப்பதை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக அமர்வு தெரிவித்தது. இத்தகைய தீர்ப்புகளை உருவாக்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஏற்க முடியாது என்றும், விவகாரத்தை ஆழமாக ஆராய விருப்பம் உள்ளதாகவும் கூறியது.
மேலும், இந்த விவகாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் இந்திய பார் கவுன்சிலுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் இதே போன்ற ஒரு வழக்கில், ஏ.ஐ. பயன்படுத்தி மனுக்கள் தாக்கல் செய்வதும், இல்லாத தீர்ப்புகளை சுட்டிக்காட்டுவதும் கவலை அளிப்பதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.




