அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டின் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தமிழக மாணவி உட்பட நால்வர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆஸ்டினில் உள்ள ஒரு மது பான விடுதியில் இரண்டு நாட்களுக்கு முன், கூட்டம் அதிகமாக இருந்த பொழுதுபோக்கு பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மூவர் அன்றே உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் காயங்களால் இன்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் 21 வயது இந்திய மாணவி சவிதா சண்முகசுந்தரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் சில மாதங்களில் பட்டப்படிப்பை முடிக்க இருந்ததாக பல்கலைக்கழக அதிகாரிகள் கூறினர்.

சவிதா பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இரட்டை பட்டப்படிப்புகளை படித்து வந்ததாகவும், ஆஸ்டின் மெக்கோம்ப்ஸ் வணிகக் கல்லூரியில் படிப்பில் சிறந்து விளங்கியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள், அவர் “சூப்பர்ஸ்டார்” மாணவி என்ற பெயர் பெற்றவர் என கூறியுள்ளனர்.