மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர்.

இந்த கிரிவலத்தில் பெருமளவு பங்கேற்பு இருக்க வேண்டும் என முருக பக்தர்கள் பேரவை, ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. வழக்கமாகவும் பவுர்ணமியன்று திருப்பரங்குன்றத்தில் கிரிவலத்திற்கு பெரும் கூட்டம் கூடும்.

பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மாநில செயலர் கதலி நரசிங்கபெருமாள் தலைமையிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஹிந்து முன்னணி, ஹிந்து தமிழர் கட்சி, வி.எச்.பி., அகில பாரத அனுமன் சேனா, ஹிந்து ராஷ்ட்ரிய சபா உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

முருக பக்தர்கள் பேரவை தனியாக கிரிவலத்தில் கலந்து கொண்டு, கிரிவலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு இலவசமாக ருத்ராட்சம் வழங்கியது. இதில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றதாக பேரவை தெரிவித்தது.