சென்னை: தமிழகத்தில் மார்ச் மாத சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்துடன் கூடுதலாக ரூ.2,000 சிறப்பு நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அறிக்கையில், அரசின் மாதாந்திர உதவித்தொகை பெறும் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் இதுபோன்ற சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதன் கீழ், பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் பயன்பெறும் மொத்தம் 29 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு தலா ரூ.3,200, 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,500 வழங்கப்பட்டதாகவும், பராமரிப்பு உதவித்தொகை பெறும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.8,000 வீதம் 1,62,900 மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு கிலோ ரூ.2 ஆதார விலையாக ரூ.8.53 கோடி நிதி வழங்கப்படுவதாகவும், இதனால் 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறுவதாகவும் கூறினார்.

தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம் என மீண்டும் உறுதியளித்தார்.