வாஷிங்டன்: அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது மோசடி நடந்ததாகவும், ஓட்டுகள் திருடப்பட்டதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அமெரிக்க தேர்தல் நடைமுறையைப் பார்த்து உலகமே சிரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இந்த நிலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறிய டிரம்ப், அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் எதிர்காலமே பாதிக்கப்படும் என எச்சரித்தார். மேலும் குடியரசுக் கட்சியினர் அனைவரும் மாற்றங்களுக்காக போராட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
வாக்குப்பதிவின் போது வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாகக் காட்ட வேண்டும் என்றும், வாக்களிக்க குடியுரிமைச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் மெயில் மூலம் வாக்களிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், நோய்வாய்பட்டவர்கள் மற்றும் ராணுவத்தினரைத் தவிர மற்றவர்களுக்கு மெயில் வாக்குகள் இருக்கக் கூடாது என்றும் டிரம்ப் கூறினார். இந்த மாற்றங்கள் எப்போது, எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பது குறித்து அவர் கூடுதல் விவரங்கள் தெரிவிக்கவில்லை.




