வாஷிங்டன்: ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்திருந்த மேலும் இரண்டு வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை அதிகரித்ததாகவும் ராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து கடந்த 28ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய நிலையில், அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல நாடுகள் வான்வெளியை மூடியுள்ளன; விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஈரானில் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 11 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.




