தஞ்சாவூர் அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் த.வெ.க. சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கட்சித் தலைவர் விஜய் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியினர் கூறுவதன்படி, கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுமென திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி கோரி பிப். 28 அன்று தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து போலீசார் 32 கேள்விகளை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பார்கள், பங்கேற்பவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன, அடிப்படை வசதிகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்களை போலீசார் கேட்டுள்ளனர்.
ஆனால், நேற்று வரை அந்த கேள்விகளுக்கு உரிய பதில்கள் அளிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், போலீசார் வாய்மொழி அனுமதி வழங்கியதாகக் கூறி கட்சியினர் ஏற்பாடுகளைத் தொடர்ந்தும், திட்டமிடப்பட்ட இடத்தில் பூமி பூஜையும் செய்துள்ளனர். இந்நிலையில், எழுத்துப்பூர்வ பதில்கள் இல்லாத சூழலில் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் கட்சியினரிடையே உருவாகியுள்ளது.




