சென்னையில் நேற்று பல்வேறு அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், எழிலகம் வளாகத்தில் கிராம உதவியாளர்கள் 26வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பிப். 5 முதல் நடைபெறும் இந்த போராட்டத்தில், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தங்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையில், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 50க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து, 7வது நாளாக கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு ஒதுக்கப்படும் பணி நியமனத்தை 5% இலிருந்து 25% ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வழித்தோன்றல் வாரிசுகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான குடும்ப நல வாரியம் அமைக்க வேண்டும்; கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, இலவச வீட்டு மனைகள் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
மேலும், சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மின் வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளாஸ் 1 மற்றும் 2 அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்றும், அனைத்து நிலை பணியாளர்களுக்கும் பாரபட்சமின்றி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.




