ரியாத்: மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்த நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் சவுதி அராம்கோ செங்கடல் வழியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தொடங்கும் வாய்ப்பை ஆராய்ந்து வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக வழித்தடங்களில் ஒன்று. அது மூடப்பட்டதால் வளைகுடா பகுதியில் சரக்கு கப்பல்கள் முடங்கியுள்ளதுடன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கான எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தடையற்ற விநியோகத்துக்காக மாற்று வழி தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக வளைகுடா கடல்வழியாக வர்த்தகம் செய்த அராம்கோ, நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள செங்கடல் வரை செல்லும், சுமார் 50 லட்சம் பேரல் திறன் கொண்ட குழாய் பாதையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிய வாடிக்கையாளர்களிடமும் கருத்துகளை கேட்டுள்ளதாகவும், யான்பு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெயை பெற்றுக்கொள்ள முடியுமா என்பதையும் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், செங்கடல் பகுதியும் முழுமையாக பாதுகாப்பானதாக இல்லை. ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அமைப்பினர் இப்பகுதியில் செல்லும் கப்பல்களை மீண்டும் தாக்கப்போவதாக எச்சரித்துள்ளதால், பெரிய கப்பல் நிறுவனங்கள் இந்த வழியை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றன.

மேலும், அண்மையில் அராம்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனூரா மீது ஈரான் நடத்தியதாக கூறப்படும் டிரோன் தாக்குதலால் நிறுவனம் ஏற்கனவே பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.