புதுடில்லி: ஹரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட காங். சார்பில் ‘சீட்’ வழங்க ரூ.7 கோடி வரை கேட்கப்பட்டதாக பா.ஜ. குற்றம்சாட்டி, தேசிய அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வாட்ஸாப் குறுஞ்செய்தி பரிமாற்றங்களை ஹரியானா மகளிர் காங். முன்னாள் நிர்வாகியின் கணவர் கவுரவ் குமார் வெளியிட்டதாக பா.ஜ. செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்தார். இதன் மூலம் சோனியா குடும்பம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆரம்பகட்ட ஆதாரம் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால், அந்த முன்னாள் மகளிர் காங். தலைவரின் பெயரை பண்டாரி வெளியிடவில்லை. மேலும், இந்த பேரம் 2024 சட்டசபை தேர்தல் காலத்தில்தானா என்பதையும் அவர் தெளிவுபடுத்தவில்லை.

செய்தியாளர்களிடம் பேசிய பண்டாரி, காங். பொதுச்செயலரும் எம்.பி.யுமான பிரியங்கா வாத்ரா தனது தனி உதவியாளர் மூலம் ரூ.7 கோடி கேட்கப்பட்டதாகவும், இதில் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் மற்றும் ‘சுரேஷ்’ என்ற நபருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். சோனியா குடும்பம் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பா.ஜ. எம்.பி. சம்பித் பத்ரா, காங். கட்சி ‘ஷாப்பிங் மால்’ போல் வசூலில் இறங்கிவிட்டதாக விமர்சித்தார். மற்றொரு பா.ஜ. எம்.பி. சுதான்ஷு திரிவேதி, பஞ்சாப் முதல் கேரளம் வரை காங்கிரசின் கலாசாரம் ஊழல்மயமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.