சென்னை: 2024–25ம் ஆண்டில் லஞ்ச வழக்குகளில் 126 அரசு அதிகாரிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை (DVAC) போலீசார் தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களை கண்காணித்து, புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர்கள் கூறினர். 2024–25ல் 171 அதிகாரிகள் மீது முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுடன், 129 புகார்களில் விரிவான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
அதே காலகட்டத்தில் லஞ்ச புகார்கள் தொடர்பாக 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 681 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கைது மற்றும் தண்டனை விவரங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தி மதிப்பாய்வு செய்ததாக கூறப்பட்டது.
துறை வாரியாகப் பார்த்தால், வருவாய் துறை அதிகாரிகள் 92 பேர் கைது செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளனர். அடுத்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் 41 பேர் கைது செய்யப்பட்டு இரண்டாம் இடத்திலும், உள்ளாட்சி துறை அதிகாரிகள் 32 பேர் கைது செய்யப்பட்டு மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
மேலும், 2023–24ல் 94 அதிகாரிகளுக்கு சிறை தண்டனை கிடைத்த நிலையில், 2024–25ல் அது 126 ஆக உயர்ந்துள்ளதாகவும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32 அதிகாரிகளுக்கு கூடுதலாக சிறை தண்டனை கிடைத்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்தது.




