துபாய்: பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பெரிதும் முடங்கியுள்ளதாக, கடல் போக்குவரத்து ஆய்வு நிறுவனங்களான ‘விண்ட்வர்ட்’ மற்றும் ‘கெப்லர்’ தெரிவித்துள்ளன. ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை தாக்குவோம் என்ற ஈரானின் எச்சரிக்கையே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் உலகிற்கு செல்லும் பிரதான வழி இதுவாகும். வழக்கமாக நாளொன்றுக்கு சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் இந்தப் பாதை வழியாக கடத்தப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்காக யுஏஇ, குவைத் போன்ற நாடுகளின் விமான தளங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படும் சூழலில், அந்த நாடுகளை நோக்கி ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்தது. இதன் பின்னணியில் மார்ச் 1 அன்று ஹார்முஸ் வழியாக வெறும் மூன்று கச்சா எண்ணெய் கப்பல்கள் மட்டுமே சென்றதாகவும், அவை சுமார் 28 லட்சம் பேரல்கள் ஏற்றிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தினசரி சராசரி 1.98 கோடி பேரலுடன் ஒப்பிடுகையில் 86% சரிவாகும்.

திங்கட்கிழமை அதிகாலை வரை ஒரு சிறிய எண்ணெய் கப்பல் மற்றும் ஒரு சரக்கு கப்பல் மட்டுமே வழித்தடத்தை கடந்ததாகவும், ஜலசந்தியின் இருபுறங்களிலும் 706 கச்சா எண்ணெய் கப்பல்கள் காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை சுமார் 10% உயர்ந்து பேரல் ஒன்றுக்கு 80 டாலரைத் தொட்டது. மேலும் சவுதி அரேபியாவின் ரஸ் தனூரா பகுதியில் உள்ள அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கத்தார் எரிவாயு நிலையம் தாக்கப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய இயற்கை எரிவாயு விலை 40%க்கும் மேல் உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலை சில வாரங்கள் நீடித்தால், ஆசியா மற்றும் ஐரோப்பிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ரஷ்யா போன்ற மாற்று ஆதாரங்களைத் தேட வேண்டிய சூழல் உருவாகலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேற்கு ஆசிய கச்சா எண்ணெயை அதிகம் சார்ந்துள்ள சீனா, இந்தியா போன்ற நாடுகள் நேரடி பாதிப்பை சந்திக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறினர்.