வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறிவந்த நிலையில், ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) இயக்குநர் ஜெனரல் ரபேல் குரோஸி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து தன் அறிக்கைகளில் தெளிவாக இருப்பதாகக் கூறிய குரோஸி, அணுகுண்டு தயாரித்ததற்கான சான்றுகள் இல்லை என்றாலும், அதற்கு தேவையான அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், அணுசக்தி திட்டங்களை ஆய்வு செய்ய தேவையான ஒத்துழைப்பை ஈரான் போதுமான அளவில் வழங்கவில்லை என்றும், இது கவலைக்குரியதாகவும் அவர் தெரிவித்தார். நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க ஐஏஇஏ-க்கு ஈரான் உதவாத வரை, அதன் அணுசக்தி திட்டம் முழுமையாக அமைதிக்கானது என்பதை உறுதி செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய பின் டிரம்ப், அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஈரான் அணு ஆயுதப் போரைத் தொடங்கி பல நாடுகளை தாக்கியிருக்கும் என்றும், அணுஆயுதம் இருந்தால் அதை பயன்படுத்துவார்கள் என்றும் கூறினார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோவும் ஈரானின் நோக்கம் அணுஆயுதம் பெறுவதுதான் என குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு மாறாக ஐஏஇஏ தலைவர் அணுகுண்டு தயாரித்ததற்கான ஆதாரம் இல்லை என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.




