புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக இந்தியாவில் உடனடியாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டுள்ள ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியதாக கூறப்படும் நிலையில், உலக எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான இந்த வழித்தடம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்தது. இந்தியாவின் எரிபொருள் இறக்குமதியிலும் குறிப்பிடத்தக்க பகுதி இந்த வழியாக வருவதால் கவலை அதிகரித்தது.
இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், இந்தியாவிடம் தற்போது கச்சா எண்ணெய் மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவை சேர்த்து சுமார் 25 நாட்களுக்கு போதுமான இருப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க அமைச்சகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்தியா 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து எரிபொருள் தேவையை பூர்த்தி செய்கிறது என்றும், வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா போன்ற பகுதிகளிலிருந்து சுமார் 60% இறக்குமதி செய்யப்படுவதால் ஹோர்முஸ் வழித்தடத்தின் மீது சார்பு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இயற்கை எரிவாயு தேவையில் சுமார் 50% உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் அவசர நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் தெரிவித்தார்.




