ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் நகர்வுகளை கண்காணிக்க, ஈரானின் போக்குவரத்து கண்காணிப்பு கேமராக்களை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் பயன்படுத்தியதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த பைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, டெஹ்ரான் நகரின் விரிவான போக்குவரத்து கண்காணிப்பு கேமரா வலையமைப்புக்குள் மொசாட் சில ஆண்டுகளுக்கு முன்பே நுழைந்து, பின்னர் அதை உளவு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியது.
அறிக்கையில் கூறப்பட்டதாவது, ஒரு கேமரா காட்சியில் பாதுகாப்புக் குழுவினரின் வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடம் தெளிவாக பதிவானது. இதன் மூலம் பாதுகாப்புப் பணியாளர்களின் இருப்பிடம், பணிச்சுழற்சி, அவர்கள் பாதுகாத்த நபர்கள் மற்றும் தினசரி இயக்கம் போன்ற தகவல்கள் தொகுக்கப்பட்டன.
மேலும் பாதுகாப்பு அமைப்பின் பலவீனங்கள் கண்டறியப்பட்டு, சேகரிக்கப்பட்ட தரவுகள் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் மென்பொருட்கள் மூலம் அலசப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கமேனியின் நகர்வுகள் வரைபடமாக்கப்பட்டு, அவர் 28ஆம் தேதி டெஹ்ரானின் பாஸ்தூர் வீதியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்பது தெரிய வந்ததாக அறிக்கை தெரிவித்தது.
அதே இடத்தை இறுதி இலக்காகக் கொண்டு தாக்குதல் முடிவு செய்யப்பட்டதாகவும், எச்சரிக்கை தகவல்கள் பரிமாறப்படாமல் தடுக்க மொபைல் போன் சேவைகள் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் சில நிமிடங்களில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான் படைகள் இணைந்து நடத்திய குண்டுவீச்சில் கமேனி கொல்லப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.




