ஈரானில் புதிய உச்சத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவருக்கு இஸ்ரேல் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் “பயங்கரவாத ஆட்சி” நியமிக்கும் எந்தத் தலைவராக இருந்தாலும், அவர் அழிக்கப்பட வேண்டிய இலக்காகவே கருதப்படுவார் என இஸ்ரேல் தெரிவித்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய ஆட்சியாளராகவும் உயர்மத குருவாகவும் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு கருத்து தெரிவித்தார். இஸ்ரேலை அழிப்பதாகவும், அமெரிக்காவையும் உலகத்தையும் மற்றும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்துவதாகவும் ஈரான் தொடர்ந்து பேச முடியாது என அவர் கூறினார்.
மேலும், ஈரான் மக்கள் தற்போதைய ஆட்சியை தூக்கியெறிந்து மாற்றுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கவும், அந்த ஆட்சியை அகற்றவும், அமெரிக்க கூட்டாளிகளுடன் இணைந்து முழு பலத்துடன் செயல்படுவோம் என காட்ஸ் தெரிவித்தார்.




