பெங்களூரு: மாநில சுயாட்சியை வலுப்படுத்த அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய–மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உயர்நிலை குழுவை அமைத்திருந்தது. அந்த குழு அளித்த அறிக்கையின் பகுதி–1ஐ கடந்த மாதம் 20ஆம் தேதி ஸ்டாலின் சித்தராமையாவுக்கு அனுப்பி வைத்தார். அதனுடன் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான கருத்தையும் கடிதத்தில் முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த சித்தராமையா, கூட்டாட்சி என்பது அரசியல் கோரிக்கை மட்டுமல்ல; அது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக நிதி மற்றும் சட்டமன்றம் தொடர்பான விஷயங்களில் அதிகரித்து வரும் பிரச்னைகள், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கற்பனை செய்த சமநிலையை பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் ஜனநாயக மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட கர்நாடகா தயாராக இருப்பதாகவும், மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பை திருத்த வேண்டும் என்ற தமிழக முயற்சியை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.