அரசுக்கு சொந்தமான நிலங்களை சிவில் வழக்குகளில் பாதுகாக்க அதிகாரிகள் காலத்துக்குள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகக் குறிப்பிட்டு, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு “நத்தம் புறம்போக்கு” நிலத்தின் உரிமை தொடர்பாக, ராமநாதபுரம் சார்பு நீதிமன்றம் 2001-ல் ஒருதலைபட்ச (எக்ஸ்பார்ட்டி) உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சிவில் சீராய்வு மனுவில் நீதிபதி என்.செந்தில்குமார் இந்த உத்தரவை வழங்கினார்.
இந்த வழக்கில் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தாலும், கீழமை நீதிமன்றத்தில் எதிர்மனுதாரராக இருந்த கலெக்டர் மீது நடவடிக்கை இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படாததும், அரசு சொத்துக்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது எனக் கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலர், சம்பந்தப்பட்ட கலெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிலத்தை பாதுகாப்பது மற்றும் வழக்கு நடத்துவது தொடர்பாக அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுக்கு எதிரான சிவில் வழக்குகளில் அதிகாரிகளின் கடமைகள், எதிர்தரப்பாக சேர்க்கப்படும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் காலக்கெடு, எக்ஸ்பார்ட்டி உத்தரவை ரத்து செய்ய மனு, மேல்முறையீடு மற்றும் தாமத மன்னிப்பு மனு போன்றவை இதில் தெளிவாக இடம்பெற வேண்டும் என கூறப்பட்டது.
மேலும், ஒவ்வொரு தாலுகாவிலும் ஆர்.டி.ஓ. தலைமையில் சட்டப்பிரிவை அமைத்து, அரசு தரப்பாக உள்ள அனைத்து சிவில் வழக்குகளையும் அவ்வப்போது ஆய்வு செய்து நேரத்துக்குள் நடவடிக்கை உறுதி செய்யும் அமைப்பை உருவாக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. இதற்கான அரசு உத்தரவை 6 மாதங்களில் வெளியிட வேண்டும் என்றும், மதுரை கிளை அதிகார வரம்பிற்குள் எக்ஸ்பார்ட்டி உத்தரவுகள் தொடர்பான அரசு வழக்குகள் மற்றும் அவற்றை ரத்து செய்ய எடுத்த நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறையின் கூடுதல் தலைமை செயலர் 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.




