மும்பை: மகாராஷ்டிராவில் காலியாகும் ஏழு ராஜ்யசபா இடங்களுக்கு மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 288 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் ஆளும் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ.க–சிவசேனா–தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) அடங்கிய ‘மஹாயுதி’ கூட்டணிக்கு 232 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ‘மஹா விகாஸ் அகாடி’ (காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்) கூட்டணிக்கு 50 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளதால், 7 இடங்களில் மஹாயுதிக்கு 6, எம்.வி.ஏ-க்கு 1 இடம் கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.

இந்த ஒரே இடத்தைத் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துவதால், கூட்டணிக்குள் கடும் பேச்சுவார்த்தை நிலவுகிறது. இதற்குப் பின்னணி ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம் என தெரிவிக்கப்படுகிறது.

245 உறுப்பினர்கள் கொண்ட ராஜ்யசபாவில் 10% என்ற அளவில் குறைந்தது 25 எம்.பி.க்கள் இருந்தால்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடியும். காங்கிரசிடம் தற்போது 27 எம்.பி.க்கள் உள்ள நிலையில், அபிஷேக் மனு சிங்வி, ரஜினி பாட்டீல், புலோதேவி நேதம், கே.டி.எஸ். துளசி உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைவதால் எண்ணிக்கை 25-க்கும் கீழ் செல்லும் அபாயம் உள்ளது.

மேலும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலமும் ஜூனில் முடிவடைகிறது. புதிய இடங்களை வெல்ல முடியாவிட்டால் அந்த பதவியை இழக்கும் சூழல் உருவாகும் என்பதால், மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாருடன் பலமுறை பேச்சு நடத்தியுள்ளார். இதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் சட்ட மேல்சபையில் ஏற்படும் காலியிடத்தில் உத்தவ் சிவசேனா வேட்பாளரை ஆதரிப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் புதன்கிழமை என்பதால், எம்.வி.ஏ கூட்டணி விரைவில் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.