நியூயார்க்: மோதல்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் விரைவில் அமைதியை அடைவார்கள் என்ற நம்பிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்த மாதத்திற்கான பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுள்ளது. “மோதலில் பாதிக்கப்படும் குழந்தைகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் மெலானியா டிரம்ப் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது; குழந்தைகள் நலனில் அவர் ஆர்வம் கொண்டவர் என குறிப்பிடப்பட்டது.

அமர்வில் பேசிய அவர், உலகெங்கும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அமெரிக்கா ஆதரவாக இருப்பதாக கூறினார். அவர்களுக்கு விரைவில் அமைதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும், எல்லா சமூகங்களிலும் அறிவும் புரிதலும் முழுமையாக மதிக்கப்படும் போதே நிலைத்த அமைதி உருவாகும் என்றார்.

அறிவும் ஞானமும் வழிநடத்தும் இடங்களில் அதிக அமைதி நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகம் முழுதும் அமைதியை நிலைநாட்ட குழந்தைகள் வெற்றி பெற வேண்டும்; அதற்கான வலிமையும் உறுதியும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புவதாகவும் மெலானியா தெரிவித்தார்.