திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான கொடூரங்கள் தொடர்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார். திமுக அரசு பதவியேற்றதிலிருந்து தென் மாவட்டங்கள் தொடர்ந்து பதற்றத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் சாலையோர டீக்கடையில் இருந்தவர்களை அரிவாளால் தாக்கியதாக கூறினார். மேலும், நாங்குநேரியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், வீட்டின் சுவர், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அருகில் மற்றும் கோவில் முன்பாக அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வீசப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்க முடிந்திருக்கும் என்றும், உயிரிழப்புகளைத் தவிர்க்க இயன்றிருக்கும் என்றும் அவர் கூறினார். இதே பகுதியில் முன்பு பட்டியலின மாணவர் சின்னத்துரை மீது தாக்குதல் நடந்ததாகவும், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் கவின் நெல்லை அருகே பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.

மேலும், பட்டியலின மக்களுடன் தொடர்புடைய வழக்குகளில் அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், வேங்கைவயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி அக்கறை காட்டவில்லை என்றும், திமுக அரசை மக்கள் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் எல்.முருகன் கூறினார்.