புதுடில்லி: கடல்சார் பாதுகாப்பு மற்றும் வான்பாதுகாப்புத் தேவைகளை வலுப்படுத்தும் வகையில், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகள் கொள்முதல் செய்ய ரூ.5,083 கோடி மதிப்பில் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

ராணுவ அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கடலோர காவல்படைக்காக ‘ALH Mk-2’ எனப்படும் நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் ஆறு வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ரூ.2,901 கோடி ஒப்பந்தம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் கையெழுத்தாகியுள்ளது.

இரட்டை இன்ஜின் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளவற்றை விட மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் செயல்படக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலோர பாதுகாப்புப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ளவும், கடலோர காவல்படையின் செயல்திறனை உயர்த்தவும் உதவும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ‘ஷ்டில்’ ஏவுகணைகள் வாங்க ரூ.2,182 கோடி மதிப்பில் ரஷ்யாவின் ‘JSC Rosoboronexport’ நிறுவனத்துடன் தனி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது வான்பாதுகாப்புத் திறன்களை கணிசமாக மேம்படுத்தி, கடற்படையின் வான்பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் என அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.5,083 கோடி என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.